150 சட்டத்தரணிகள் காவல்துறை அதிகாரிகளாக நியமிக்க தீர்மானம்...!

150 சட்டத்தரணிகள் காவல்துறை அதிகாரிகளாக நியமிக்க தீர்மானம்...!

150 சட்டத்தரணிகளை காவல்துறை அதிகாரிகளாக காவல்துறை சேவைக்கு இணைத்துக்கொள்ள இருப்பதாக நீதிபதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சட்டத்தை பொதுமக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும், காவல்துறை வழங்கும் சேவையை மேலும் நெறிப்படுத்துவதற்கும் ஜனாதிபதியின் வேண்டுகோளிற்கிணங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நீதிபதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்விற்கு காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் ருவண் குணசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர். த. சில்வா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் (சட்டம்) பியுமன்தி பீரிஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின் நேர்முகத் தேர்வுகளை நடத்திய பின்னரே குறித்த சட்டத்தரணிகள் காவல்துறை சேவைக்கு இணைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணிகளின் திறமைக்கேற்ப அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.

ஆட்சேர்ப்பிற்கு பின் அவர்கள் நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சேவையில் ஈடுபடுவார்கள் எனவும், மேலும் அவர்களுக்கு சட்டம் மற்றும் காவல்துறை சேவையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பயிற்சி வழங்கலுக்காக சட்டமா அதிபர் திணைக்களமும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட காவல்துறை பரிசோதகர்களாக நியமிக்கப்படும் சட்டத்தரணிகளுக்கு சிறப்புத் தகுதிகளாக தமிழ் மொழியில் சிறந்த தேர்ச்சி இருக்க வேண்டும் என்றும், இதன் மூலமாக தமிழ் மக்களுடன் நல்லுறவை பேணும் வாய்ப்புள்ளது எனவும் நீதிபதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் தொடர்பான அறிவு அவசியமாக இருக்க வேண்டும் என்பதுடன், குறித்த பயிற்சி அளிக்கப்பட்ட பின் தேவையான சேவைகளுக்கேற்ப அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.