
15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்...!
கொவிட்-19 தொற்றுறுதியான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பில் இருந்தநிலையில், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் அனைவரையும், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், பைசல் காசிம், எச்.எம்.எம். ஹாரிஸ், எம்.எஸ்.தௌபீக், நஷீர் அஹமட், கயந்த கருணாதிலக்க, தலதா அதுகோரல உள்ளிட்டவர்களுக்கே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் வழமைப்போலவே நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 300 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் இன்றைய தினம் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கொவிட்-19 தொற்றுறுதியான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க உட்பட மேலும் 4 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது