மின்னஞ்சல் மூலம் போலிப் பரிசு - பொதுமக்கள் ஏமாந்து விடவேண்டாம்

மின்னஞ்சல் மூலம் போலிப் பரிசு - பொதுமக்கள் ஏமாந்து விடவேண்டாம்

நாட்டில் தேவையற்ற வகையில் தங்கியிருந்து இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை மேற்கொண்டதாக கூறப்படும் 2 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (09) மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இவர்கள் கல்கிசை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சட்ட விதிகளுக்கு மாறாக நாட்டிலிருந்து கொண்டு இணையத்தளத்தின் மூலம் நிதி மோசடியில் ஈடுப்பட்ட சில வெளிநாட்டவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடம் எவரும் சிக்காதிருப்பதற்காக இணையத்தளத்தின் ஊடாக பண கொடுக்கல் வாங்கலில் ஈடுப்படும் போது பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிசை பிரதேசத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த இவர்களின் விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு இணையத்தள மோசடிகளில் ஈடுப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக விசேட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இவர்கள் பயன்படுத்திய கணனி, கையடக்க தொலைபேசிகள் தற்பொழுது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்து கொண்டு இணையத்தளம் மூலமாக மோசடிகள் செய்வது அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

விசேடமாக சிலரது பிறந்த நாள், திருமண வைபவம் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட நிகழ்வுகளின் போது பல்வேறு வகையில் மின்னஞ்சல்கள் மூலம் தகவல்களை அனுப்பி அதனை பெறுவோருக்கு விசேட பரிசுகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அல்லது வெளிநாடுகளில் இருந்து விசேட பரிசு ஒன்று உங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது என்று ஒருதொகை பணத்தை இதற்காக வைப்பீடு செய்யுமாறு கூறி, வைப்பீடு செய்யும் பணத்தை விட பல மடங்கு பெரியளவில் பணம் கிடைக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு பொதுமக்கள் ஏமாந்து போகின்றனர் என்றும், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.