
நாட்டில் தங்கச் சங்கிலிகள் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகாித்து வருவதாக பிரதி காவல் துறை மா அதிபர் தொிவிப்பு!
போதைப்பொருள் சம்மந்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைதுசெய்யப்பட்ட பலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களால் செய்யப்படுகின்ற சிறுகுற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிணைப்பெற்று விடுதலையாகின்ற போதைப்பொருள் குற்றவாளிகளால் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்படுதல் மற்றும் திட்டமிட்ட கொள்ளை சம்பவங்கள் என்பனவும் அதிகரித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, அம்பலாங்கொடை - மீட்டியாகொடை பகுதியில் தாதியர் ஒருவரின் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற ஒருவர் ஆற்றில் குதித்தமையை அடுத்து நீரில் மூழ்கி மரணித்தார்.
இன்றுகாலை மல்வென்ன தொடருந்து நுழைவாயில் பகுதியில் உந்துருளியில் வந்த ஒருவர் குறித்த தாதியரின் சங்கிலியை கொள்ளையிட்டுள்ளார்.
பின்னர் அந்த பகுதியிலுள்ள மக்கள் அவரை துரத்தியமையை அடுத்து அருகில் இருந்த ஆற்றில் குதித்த நிலையில் அவரை பிடித்து மக்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது போதை பொருட்களுக்கு அடிமையானவர்களால் தங்க சங்கிலியை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.