மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டது வவுனியா நகரம் -பாடசாலைகளும் இயங்காது

மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டது வவுனியா நகரம் -பாடசாலைகளும் இயங்காது

வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தளர்த்தப்படும் என வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.

வவுனியா நகரில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான அவரச கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா நகரில் 54 கொவிட்தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது. அதன்படி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நகரில் அமைந்துள்ள வியாபாரநிலையங்களில் பணிபுரிபவர்களின் சுகாதார தன்மையினை கருத்தில் கொண்டு அவர்களிற்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நகரின் சில பகுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட சந்தியில் இருந்து இறம்பைக்கும் மகளிர் பாடசாலை வரையான சந்தி,தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வரையான பகுதி, காமினி மகாவித்தியாலத்தை உள்ளடக்கிய பகுதிகள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.

அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு அரச அதிபர் பணித்துள்ளார்.

இதேவேளை மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்படாதநிலையில் கூட்டுறவு சங்கங்கள், சதோசநிறுவனம், மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதற்கட்டமாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை பழங்கள் மற்றும் மரக்கறி மொத்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் நாளையில் இருந்து காமினி மகாவித்தியாலத்தில் அமைந்துள்ள மைதானத்தில் அதனை முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றிலிருந்து சாலை ஓரங்களில் வியாபாரம் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நகர்ப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் , சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம் , மற்றும் ஆரம்ப பாடசாலை,இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் , இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை , காமினி மகா வித்தியாலயம், முஸ்லிம் மகாவித்தியாலயம் மற்றும் ஆரம்ப பாடசாலை ஆகிய ஏழு பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்றார்