அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவுகூரல் நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளின் பின்னர் இந்த நினைவிடம் நேற்று இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக திரண்ட வண்ணமுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த செயற்பாட்டினை கண்டித்து, மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் நேற்று இரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த போராட்டதை வலுசேர்க்கும் முகமாக அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.