யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா - பிரபல உணவகமும் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா - பிரபல உணவகமும் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று மாலை இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த மாணவன், வீட்டுக்குச் சென்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்று வந்துள்ளார்.

தம்புள்ளையிலிருந்து கடந்த 26ஆம் திகதி பேருந்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாணவனின் தாயாருக்கு கொரோனா தொற்று உள்ளது என இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்ட நிலையில் மாணவனிடமும் இன்று மாதிரிகள் பெறப்பட்டன. அவரது மாதிரிகள் உடனடியாக பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்திய போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அதனால் அவர் உணவு வாங்கச் சென்ற ஆனைப்பந்தி உணவகம் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.