கரூரில் காதலை கைவிட மறுத்த வாலிபரை காதலி மூலம் செல்போனில் அழைத்து உறவினர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். இவரது மகன் ஹரிகரன் (வயது 22). இவர் கரூர் மாரியம்மன் கோவில் வீதியில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஹரிஹரன் காதலித்து வந்தார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டிலும் தொடக்கம் முதலே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் அவர்கள் காதலை கைவிடவில்லை.
கடந்த மாதம் காதலி தனது காதலன் ஹரிகரன் வீட்டுக்கு சென்று பெற்றோரை சந்தித்து தங்களது காதலை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். அப்போதும் அவர்கள் நீ வேறு சமூகத்தை சேர்ந்தவர். எங்கள் மகனை உங்கள் வீட்டில் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே என் மகனை மறந்துவிடு என்று அறிவுரை கூறியுள்ளனர்.
அதேபோல் காதலியின் வீட்டிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடுமையாக கண்டித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பிற்பகலில் ஹரிகரனுக்கு காதலியின் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய அவர் தான், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே காத்திருப்பதாகவும், சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அதனை நம்பி ஹரிகரனும் உடனடியாக தனது நண்பர்கள் சிலருடன் அங்கே சென்றுள்ளார். ஏற்கனவே வந்து காத்திருந்த காதலியுடன் ஹரிகரன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்துள்ளது. அதில் 4 பேர் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் ஹரிகரனுடன் பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென வாக்குவாதமாக மாறியுள்ளது.
யாரும் எதிர்பாராத வகையில் காரில் வந்தவர்கள் ஹரிகரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அத்துடன் தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் ஹரிகரனின் முதுகில் கீறியுள்ளனர். இதில் ரத்தக்காயம் ஏற்பட்ட அவர் நடுரோட்டில் விழுந்து வலியால் துடித்தார்.
பின்னர் காரில் வந்த அதே கும்பல் ஹரிகரனை தூக்கி போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையே ஹரிகரனுடன் வந்த நண்பர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். பின்னர் அவர்களுக்கு ஹரிகரன் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் ஹரிகரனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதற்கிடையே அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிகரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கரூர் சின்ன ஆண்டான்கோவில் பகுதியை சேர்ந்த காதலியின் பெரியப்பா சங்கர் (45), மாமா வெள்ளைச்சாமி (35), இன்னொரு மாமா கார்த்திக் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடி தலைமறைவான வேலவன், முத்து ஆகியோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையுண்ட ஹரிஹரன் அந்த இளம் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். இருவேறு சமூகம் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது.
இந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே திடீர் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இளம்பெண் ஹரிகரனுடன் பேசுவதை தவிர்த்தார்.
இருப்பினும் அவர் செல்போனில் காதலிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காதலியின் உறவினர்கள் காதலனை செல்போனில் அழைத்து கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே வரச்சொல், பேசிப் பார்ப்போம். ஒத்து வந்தால் விட்டு விடலாம். அல்லது போலீசில் ஒப்படைக்கலாம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து இளம்பெண் காதலனிடம் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு வருமாறு என அழைத்துள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் பிரச்சனை முற்றி கைகலப்பாக கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டு ஹரிகரனை கொலை செய்யும் நோக்கத்துடன்தான் அங்கு வரச்சொல்லி அரங்கேற்றி உள்ளதாக ஹரிகரனின் பெற்றோர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த கொலை நடந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் தர்மபுரியில் தொடங்கி பல்வேறு ஆணவ கொலைகள் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் ஹரிகரனும் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலியின் உறவினர்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.