யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது மாணவர்களுடைய உளவிருத்தி செயற்பாடு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகள் இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகவும் அவசியமான முயற்சியாகும் மாணவர்களின் கல்வி கடந்த வருடம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.
எனவே அவர்களுடைய கல்வியை மீண்டும் செயற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு தணிந்துள்ள சூழ்நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறு பாடசாலைகளை இயக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்காக மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலை சமூகமும் முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை பேணுதல், முககவசம் மற்றும் கை கழுவுவது தொடர்பான முன்னெச்சரிக்கைகளை கடைப் பிடித்தல் அவசியம்.
அடுத்ததாக பாடசாலைகளுக்கு காய்ச்சல் தொண்டை நோ இருமல் உள்ளவர்கள் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
கல்வி நடவடிக்கைகளை பார்க்கும் போது கொரோனா காலத்தில் இழந்த கற்றல் செயற்பாடு மீட்கப்பட வேண்டும். மிக முக்கியமானது சில பின்தங்கிய பிரதேசங்களில் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது.
இது நீண்டகால நோக்கில் ஒரு சமூகப் பிரச்சனையாக மாறும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் எதிர் காலத்தில் அவர்களுடைய வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சமூகத்தில் சிறுவயதிலே தொழிலுக்குச் செல்லும் தன்மை சில இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத வேண்டிய மாணவர்கள் சிலர் தமது பாடப்பரப்பு முடியாத காரணத்தினால் பரீட்சைக்கு தோற்றாமல்விடலாம் அல்லது குறைந்த பெறுபேற்றினை எடுக்க முடியும் எனவே இந்த மாணவர்களுக்கு குறைந்தது நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு முற்பரீட்சை முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடைவிலகல் தவிர்க்கப்படும்.
பாடசாலையிலிருந்து மாணவர்கள் இடை விலகும் போது சமூகத்தில் ஏற்படுகின்ற சமூகத் தாக்கங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்படும்..
அடுத்ததாக எதிர்காலத்தில் மாணவர்களுக்கான விசேட கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம் அவ்வாறு செய்யா விடின் சமூகத்தில் ஒரு வெற்றிடம் காணப்படும்.
கொரோனாகாலத்தில் zoom தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பல மாணவர்கள் கல்விச்செயற்பாட்டை முன்னெடுத்தார்கள். ஆனால் வசதி குறைந்த பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் zoom தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை. குறிப்பாக நகரப்பகுதி மாணவர்கள் zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி செயற்பாட்டை முன்னெடுத்தார்கள்.
எனினும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத மாணவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த ஒரு வருடமாக மாணவர்கள் வீடுகளில் தமது நேரத்தை செலவிட்டுள்ளார்கள். அது அவர்களுடைய உளவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.
எனவே மாணவர்களை குழு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.
குறிப்பாக கற்றல் செயற்பாடு, விளையாட்டாக இருக்கலாம் மாணவர்கள் குழுவாக இயங்கி செயற்படுதல் வேண்டும். அடுத்ததாக விளையாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். பாடசாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு முன்னைய காலங்களை விட இரண்டு மடங்காக நேரத்தினை விளையாட்டுக்கு ஒதுக்குவதன் மூலம் அவர்களுடைய உளவிருத்தி செயற்பாட்டினை அதிகரிக்க முடியும்.
மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய உள சமூக தாக்கங்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் கொரோனா காலத்தில் அதிக மாணவர்களின் பெற்றோர்கள் வேலைவாய்ப்பினை இழந்திருப்பார்கள் அவ்வாறான நிலையில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் மீண்டும் வரும்போது அவர்களுடைய உள விருத்தி தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டும்.
அத்தோடு பாடசாலைகளில் மாணவர்களுடைய பாடவிதானத்தினை முடிப்பதற்கு மட்டும் நேரத்தை செலவழிக்காது பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
நீண்டகாலமாக வீடுகளிலிருந்து மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு வந்திருக்கின்றார்கள். எனவே அவர்களுடைய ஒழுக்க செயற்பாடுகள் தொடர்பிலும் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.