திரையரங்குகளின் மின்சார நிலுவையை செலுத்துவதற்கு நிவாரண கால அனுமதி!
திரையரங்குகளின் மின்சார நிலுவை பட்டியலை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொவிட் - 19 பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தமையினால், நிதி பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் செலுத்தப்படவேண்டிய மின்சார நிலுவைப் பட்டியல் தொகையை செலுத்தாத திரையரங்குகள் அந்த கட்டணத்தை 12 மாதங்களில் செலுத்த முடியும்.
அத்துடன் இந்த காலப்பகுதிக்குள் மின்சார நிலுவை கட்டணத்தின் அடிப்படையில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்கவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் பகுதிகள் அல்லாத நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகள் இன்றைய தினம் மீள திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது