மஹர சிறைச்சாலை மோதலில் மரணித்த கைதிகளின் சரீரங்களை தகனம் செய்யுமாறு உத்தரவு...!!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் மரணித்த மேலும் 4 கைதிகளின் சரீரங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு வத்தளை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு சரீரங்களில் மூவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 11 பேர் மரணித்தனர்.
இந்தநிலையில் எஞ்சியுள்ள மூன்று சரீரங்கள் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை நீதியமைச்சர் அலிசப்ரியிடம் இன்று கையளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் ஐவர் அடங்கிய குறித்த குழு நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் 13 அடங்குவதாக குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்தார்.
அத்துடன் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நீதியமைச்சரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.