வீட்டின் கதவை உடைத்து இரவு நேரம் அத்துமீறிய கும்பல் சரமாரியாக வெட்டியது - பெண்கள் உட்பட ஐவர் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்திலுள்ள வீடு ஒன்றினுள் புகுந்த கும்பல் அக்குடும்பத்தின் வீடு கதவை உடைத்து அக்குடும்பத்தையே சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர்.
இவ்வாறு வெட்டியவர்கள் அக்கிராமத்திற்கு அயலிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து வந்த குழுவினர் என அறிய வருகின்றனது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இளைஞர் விவசாயத்திட்டக் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு(27) 8 மணியளவில் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு குடும்பத்தினர் நித்திரைக்குச் சென்றுள்ளனர். இதன் பின்னர் அயல் கிராமத்திலிருந்து கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வீட்டுக் கதவை உடைத்து, அக்குடும்பத்திலிருந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் ஆகிய நால்வரையும் மற்றும் அவர்களது அயல் வீட்டுக்கார ஆண் ஒருவரையும் வேறுபாடின்றி வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், அவர்களது அயல் வீட்டார் ஒருவருமாக 5 பேர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அனைவரையும் கிராமத்தவர்கள் மீட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெல்லாவெளி பொலிசார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகயையும் மேற்கொண்டு வருகின்றனர்.