
7 ஆவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவு்ள மஹர சிறைச்சாலை சம்பவ வழக்கு..!
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு, இன்றையதினம் ஏழாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
வத்தளை நீதவான் நீதிமன்றில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கடந்த மாதம் 23ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 11 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு வத்தளை நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.
குறித்த வழக்கு வத்தளை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில், கடந்த 23ஆம் திகதி இறுதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது தமது கருத்தை தெரிவித்த நீதவான், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் குழாமுக்கு இந்த வழக்கில் முன்னிலையாக முடியுமா? என்பது தொடர்பான தீர்ப்பை இன்றையதினம் அறிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம், எஞ்சியுள்ள கொவிட்-19 தொற்றுறுதியான கைதிகளின் சரீரங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
ஆகையினால் வழக்கில் முன்னிலையாவதற்காக இன்று ஏழாவது தினமாகவும், பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் வத்தளை நீதவான் நீதிமன்றில் பிரசன்னமாகி உள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்