நாட்டின் கொரோனா தொற்றாளர்கள் பற்றிய முழு விபரம்...!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 674 பேரில் 174 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 153 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 110 பேருக்கும், கேகாலையில் 21 பேருக்கும் கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் கண்டியில் 52 பேருக்கும், நுவரெலிய மாவட்டத்தில் 26 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 50 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 15 பேருக்கும், நேற்றைய தினம் தொற்றுறுதியாகியுள்ளது.
காலி மாவட்டத்தில் 20 பேருக்கும், புத்தளத்தில் 8 பேருக்கும், மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கும், அம்பாறையில் 5 பேருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர, அநுராதபுரம் மாவட்டத்தில் 5 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 3 பேருக்கும், பொலனறுவையில் ஒருவருக்கும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக கொவிட்19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வட்டவளை ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடைய மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளதாக அம்பகமுவ பிரதேச வைத்திய சுகாதார அதிகார பிரிவிற்கு உட்பட்ட பதில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ் காமதேவன் தெரிவித்தார்.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் மவுன்ஜின் தோட்டப்பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய வட்டவளை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 18 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் கினிகத்தேனை, வட்டவளை, டெம்பல்ஸ்டோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 54 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 614 பேரும், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 54 பேரும் அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படிஇ மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் நாடு திரும்பிய ஆறு பேருக்கு கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
8 ஆயிரத்து 162 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 650 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 32 ஆயிரத்து 701 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்படும் ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியான 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டார்.
கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையில் 8 ஆயிரத்து 600 பேருக்கு ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் ஆயிரத்து 100 பேருக்கு ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் கொவிட்-19 தொற்றுறுதியான 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மேல்மாகாணத்தில் வெளியேறும் பகுதிகளில் தொடர்ந்தும் ரெப்பிட் எண்டிஜின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.