காவற்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை
கஹடகஸ்டதிகிலிய- நொலுகொல்லேகட கிராமத்தில் பிரவேசித்த காட்டு யானையைத் துரத்தச் சென்ற காவற்துறை அலுவலர் ஒருவரை குறித்த யானை தாக்க முயன்றபோது அது அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
காட்டு யானை பிரவேசித்து வீடுகளையும் பயிர்களையும் சேதப்படுத்தியதாக குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கஹடகஸ்திகிலிய காவல்துறை அதிகாரிகள் குழு நேற்று காலை கிராமத்திற்குச் சென்றது.
கஹடகஸ்திகிலியா - ரத்மல்கஹவேவா பிரதான வீதியில் உள்ள நோலுகொல்லேகட பகுதியில் காட்டு யானை காவற்துறை வாகனத்தை தாக்க முயன்றது.
பின்னர், ஒரு காவற்துறை அலுவலர் காட்டு யானையை விரட்ட வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
எனினும் காட்டு யானை அந்த நேரத்தில் அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து காட்டு யானையை சுட்டுக் கொன்றதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கஹடகஸ்திகிலியா காவல்துறையின் பொறுப்பதிகாரி, தெரிவித்தார்.
இறந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரமுடையது என்பதோடு 30 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் இறந்த யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள வயல் காணியில் குறித்த யானை உடல் காணப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் பிரதேச மக்கள் அறியப்படுத்தியமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் யானை மரணித்தமைக்கான காரணம் இதுவரையில் தெளிவாகாத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.