அபாய வலயமாகிறதா புதுக்குடியிருப்பு? பதட்டத்தில் மக்கள்! சுகாதார தரப்பு விடுத்துள்ள கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாக நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியானது.
இவர் தம்புள்ள பகுதிக்குச் சென்று மரக்கறிகளை பெற்று வந்து புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு ஆகிய சந்தை வியாபாரிகளுக்கு வழங்கும் நபர் என முதல்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தம்புள்ளவிற்கு செல்பவர்கள் உள்ளிட்ட மரக்கறி வியாபாரிகள் சிலரிடம் அண்மையில் எழுமாறாக பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டது.
எழுமாறாக பிசிஆர் மாதிரிகளை பெற்றமையால், மாதிரிகள் பெறப்பட்ட யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. இப்படி, மாதிரி பெறப்பட்ட ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று மாலை பிசிஆர் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடியுள்ளார். இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது.
நேற்று முடிவுகள் வெளியாகிய நிலையில் குறித்த நபரின் வீட்டுக்குள் நபர் முடக்கப்பட்டு இராணுவம் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுகாதார அதிகாரிகள் குறித்த நபர் நடமாடிய இடங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பின் அவர் கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நோயாளர் காவுவண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவரின் நடமாட்டம் பற்றிய புதிய பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில் அவர் ஐயப்ப பக்தர் எனவும் ஐயப்பன் விரதம் இருந்தார் என்றும் நேற்று தான் புதுக்குடியிருப்பு கைவேலியிலுள்ள பாரதி சாமி ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று மாலை கழற்றியுள்ளார்.
அங்கு மண்டல பூசை நடந்தது. அங்கு பெருமளவு ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடியுள்ளனர். சுமார் 130 பேர் வரையில் அங்கு ஒன்றுகூடியதாக, ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்ற ஒருவர் தெரிவித்தார். இதனால் அவருடன் தொடர்பிலிருந்த ஐயப்ப பக்தர்களும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படலாம் என அறியமுடிகிறது.
இந்நிலையில் தொற்றுக்குள்ளான நபர் ஒரு மரக்கறி மொத்த வியாபாரி என்பதால் அவர் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு ஆகிய சந்தை வியாபாரிகளுக்கு மரக்கறிகளை வழங்கி வந்துள்ளார்.
எனவே குறித்த நபருடன் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரியிடம் அல்லது புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறும் இதனால் இது பாரிய சமூக தொற்றாக பரவுவதை தடுக்க முடியும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் முகமாக பொலிஸார் ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கான அறிவுறுத்தலை வழங்கி வருகின்றனர்.
மறு அறிவித்தல் வரை ஆலயங்களில் வழிபாடுகளை நிறுத்துமாறும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களை தவிர்க்குமாறும் பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.