புலிகளை வேட்டையாடி விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெறுகிறதா..?
இந்நாட்டில் உள்ள புலிகளை வேட்டையாடி விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொத்மலே-ஹெல்பொட தோட்டத்தில் சிறுத்தைப்புலியும் அதன் குட்டியொன்றும் வலையில் சிக்கியிருந்த நிலையிலேயே குறித்த ஆர்வலர்கள் இவ்வாறு சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் நுவரெலியா - புஸல்லாவை - எல்பொட தோட்டப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வேட்டைப் பொறியில் சிக்கிய இரண்டு சிறுத்தைப் புலிகளில் ஒன்று உயிரிழந்திருந்தது.
இந்த நிலையில், மற்றைய சிறுத்தைப் புலியை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
புஸல்லாவை, எல்பொட தோட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படடிருந்த வேட்டைப் பொறியில் இரண்டு சிறுத்தைப் புலிகள் சிக்கியிருந்தன.
இது குறித்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, குறித்த சிறுத்தைப் புலிகளை மீட்கும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர்.
எனினும், வேட்டைப் பொறியில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைப் புலிகளுள் ஒன்று உயிரிழந்துள்ளது.
நாட்டில் அண்மைக் காலமாக வளைகளில் சிக்கி சிறுத்தைப் புலிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகிவருகின்றன.
லக்ஷபான - வாழைமலை தோட்டத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று வளை ஒன்றில் சிக்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மொத்தமாக 700 முதல் 950 வரை புலி இனங்கள் வாழ்ந்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதில் 650 புலிகள் வனப்பகுதியில் வாழ்வதோடு சுமார் 150 புலிகள் வரையில் வனத்தை விட்டு வெளியேறியிருக்கின்றன.
2009 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க இந்திய விலங்கின கட்டளைச் சட்டத்தில் புலி ஒரு சிறப்பு விலங்காகவும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.