சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வானில் நிகழவுள்ள அதிசயம்! பூமிக்கு பாதிப்பா?
சனி - வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு இன்று நிகழவுள்ளது.
சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அதிசயம் இன்று வானில் நிகழப்போகின்றது.
இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) சரியாக 397 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன.
அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு (Angular Distance) புள்ளி ஒரு டிகிரியாக (0.1 Degree) இருந்துள்ளது. இதே அளவு தொலைவிலான பார்வைக் கோண நெருக்கம், இன்று அமையவுள்ளது.
இதே போன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்த 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் அந்த இரண்டு கோள்களும் அருகில் இருக்காது. அவற்றின் தூரம் மிக அதிக அளவில் இருந்தாலும் அவை நேர்கோட்டில் இணைவதால் அவ்வாறு தோன்றும்.
நிஜத்தில் வியாழன் கோளானது பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், சனி கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. எனவே இவற்றிற்கு இடைப்பட்ட உண்மையான தொலைவு 74 கோடி கிலோ மீட்டரைவிட அதிகம்.
இவ்வளவு தொலைவில் இவை இருப்பதால், இந்த நிகழ்வு நடைபெறும் சமயத்தில் இந்த கோள்கள் நம் பூமி மீது ஏற்படுத்தும் தாக்கம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இரண்டு கோள்களுக்கு இடையிலான கோண ஒருங்கமைவு அவ்வப்போது நடைபெற்றாலும் வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகிய இந்த இரண்டு கோள்களின் ஒருங்கமைவு மிக அரிய நிகழ்வு என்பதால் இதை காண உலகெங்கிலும் ஏராளமான மக்கள் காத்து கிடக்கின்றனர்.