முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து: மூவரை காணவில்லை

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து: மூவரை காணவில்லை

முல்லைத்தீவு – மல்லாவியிலுள்ள வவுனிக்குளம் வாவியில் கெப் வாகனமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 வயது பெண் குழந்தை உட்பட மூவர் காணாமற்போயுள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

2 வயது சிறுமியும் வாகன சாரதியான 37 வயதான ஆணொருவரும் காணாமற்போயுள்ளனர்.

நிரில் மூழ்கிய 12 வயதான சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் வாகனத்திலிருந்த 12 வயதான மற்றுமொரு சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

காணாமற்போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மல்லாவி – செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர்களே காணாமற்போயுள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் கெப் வாகனம் வாவியில் வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.