வடக்கின் ஒரு பிரதேசத்தில் இரண்டாகப் பிரியும் கல்வி வலயம்!

வடக்கின் ஒரு பிரதேசத்தில் இரண்டாகப் பிரியும் கல்வி வலயம்!

கிளிநொச்சி கல்வி வலயத்தினை இரண்டாக பிரிக்க மாவட்ட அபிவிருத்தி குழு அங்கிகாரம் வழங்கியது. நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் தனி கல்வி வலயமாக இருந்த கிளிநொச்சி கல்வி வலயமானது கரைச்சி, பூநகரி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும், கண்டாவளை பச்சிலைப்பள்ளி கல்வி கோட்டங்களை இணைத்து தனி கல்வி வலயமாகவும் இரண்டாக பிரிக்க நேற்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அதற்கு அமைவாக ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவ்வாறு எடுக்கபட்ட தீர்மானம் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில்,

வலய பிரிப்பு என்பது ஏற்கனவே யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு கல்வி அமைச்சரால் இதற்கான விசேட அனுமதி தரப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. ஆகவே கிளிநொச்சி வலயத்தினை இரண்டாக பிரிப்பதற்கான மும்மொழிவு குறிப்பாக கரைச்சி, பூநகரி பிரதேசத்தை உள்ளடக்கியதாக ஒரு பிரிவையும், கண்டாவளையையும், பளையையும் இணைத்த ஒரு வலயமாக பிரிப்பதற்கான மும்மொழிவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடக சந்திப்பின் போது அமைச்சரிடம் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுவரை கிளிநொச்சி மாவட்டம் ஒரு கல்வி வலயமாகத் தான் இருக்கின்றது. அதை இலகுவாக நிர்வகிப்பதற்கு, இலகுவாக நடத்துவதற்கு அந்த வலயத்தினை இரண்டாக பிரிப்பதற்கு கலந்துரையாடப்பட்டு அந்த இரண்டையும் சுமுகமாக தீர்ப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

பூநகரி கரைச்சி உள்ளடங்கலாக ஒரு வலயமாகவும், கண்டாவளை, பளை ஆகியவற்றை இணைத்து இரண்டாக பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.