அதிகரிக்கும் கொரோனா தொற்று- வடமாகாணம் முழுவதும் மூடப்படும் முக்கிய இடங்கள்!
கொரோனாத் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று நிலமையை அடுத்து பொதுச் சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களின் ஆபத்தினைக் கருத்திற் கொண்டு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளை மூடுமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், சந்தை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வீதியோரம் அல்லது நடமாடும் விற்பனையை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வழங்கியுள்ள பரிந்துரைகளின்படி கொரோனா நிலமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வடமாகாணத்தில் அனைத்து பொதுச் சந்தைகளையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை மூடப்படவேண்டும்.
வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வியாபாரத்தை பரவலாக்கி வீதியோரங்களில் அல்லது தமது வதிவிடங்களில் அல்லது நடமாடும் விற்பனையில் ஈடுபட அனுமதியளிக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் பலர் வியாபாரம் செய்தலைத் தடை செய்ய வேண்டும். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையை விரைவில் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.