தமிழ் மக்கள் ஒழுக்கமானவர்கள் - இராணுவத் தளபதி புகழாரம்!
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென என இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,
தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை முதல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள்.
அதன் காரணமாக முப்படையினர் மற்றும் பொலிஸார், சுகாதாரப் பகுதியினரால் வடபகுதியில் இலகுவாக கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கூடியதாகவுள்ளது.
நேற்றைய தினம் கூட ஜனாதிபதி யாழ். மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார். அத்தோடு அரசாங்க அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கண்காணித்து வருகிறோம்.
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது. எனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு இந்த கொரோனா நோயினை கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நான் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் சில புதிய சுகாதார நடைமுறைகளை செயற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
மக்களை கொாரனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக மக்களை பாதிக்காதவாறு சில சுகாதார கட்டுப்பாடுகளை எடுக்கவுள்ளோம். அதற்காக அனைவரையும் தனிமைப்படுத்த மாட்டோம்.
ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையை பொறுத்த வரைக்கும் கொரோனாவானது கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது. எனினும் அதனை தொடர்ச்சியாக பேணவேண்டும். அதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும்.
குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியில் செல்லக் கூடாது.
அவ்வாறு சென்றால் ஏனையவர்களுக்கும் இலகுவாகப் பரவும். யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனால் கொழும்பின் சில இடங்களில் இவ்வாறு நடந்துள்ளது என்றார்.