
யாழில் கொரோனா அச்சம்! சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்
மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று சனிக்கிழமை காலை பெறப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், மருதனார்மடம் சந்தை வியாபாரி - முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் இன்று(12) மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பிலும் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.
இதேவேளை, உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய, கடந்த புதன்கிழமை எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டன.
அவர்களில் ஒருவரான உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் வசிக்கும் 38 வயதுடைய குடும்பத் தலைவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.