டிரோன் கெமராவில் ஒளிப்பதிவு செய்த ஐவர் கைது!
அநுராதபுரத்தில் விமானப்படை முகாமுக்கு அண்மையில் டிரோன் கெமரா ஒன்றின் மூலம் ஒளிப்பதிவுகளை மேற்கொண்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அநுராதபுர விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களையடுத்தே காவல் துறையினரால் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றது
குறித்த முகாமை அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள அரச பாடசாலையொன்றின் விவரணத் திரைப்படமொன்றிற்காகவே டிரோன் கெமரொவைப் பயன்படுத்தி குறித்த ஒளிப்பதிவை மேற்கொண்டதாக கைதாகிய ஐவரும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் டிரோன் கெமராவைப் பயன்படுத்தி ஒளிப்பதிவுகளை மேற்கொள்வதற்கு விமானப்படையிடமோ, சிவில் விமான சேவை அதிகார சபையிடமோ அனுமதி பெறப்படவிலையென்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரும் பொரலஸ்கமுவை, கனேமுல்லை, கிரிந்திவெல, அல்விட்டிகல மற்றும் மொரகஹஹேன போன்ற பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர்களென காவல் துறை தெரிவித்துள்ளது.