கொரோனா தாக்கத்தினால் இந்தியர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏதாவது சிக்கல் வருமா?, வேலைவாய்ப்பு கூடுமா? அல்லது குறையுமா?, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உண்டாகுமா? போன்ற பல கேள்விகளை விடையை அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர். கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் உலக நாடுகள், சீர்குலைந்திருக்கும் பொருளாதாரத்தையும் சீரமைக்க முயன்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கத்தினால் இந்தியர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏதாவது சிக்கல் வருமா?, வேலைவாய்ப்பு கூடுமா? அல்லது குறையுமா?, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உண்டாகுமா? போன்ற பல கேள்விகளை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷிடம் முன்வைத்தோம்.
இவர் எத்தியோப்பியா நாட்டில் பேராசிரியராக பணியாற்றியபடி, நட்பு ரீதியாக பல தமிழர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர். அதுவே தொடர்கதையாகி போக, அரசு வழிகாட்டுதலின்படி ‘ரசா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் பல தமிழர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார். அந்த அனுபவமும், பேராசிரியர் திறனும்தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமான சந்தேகங்களுடன், ராஜேஷை சந்திக்க வைத்தது. திண்டுக்கல் அலுவலகத்தில் இருந்தவரிடம் பேசினோம். அவை இதோ....
கொரோனா பாதிப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிக்கலை உருவாக்குமா?
இல்லை. கொரோனாவுக்கு முன்பாக வெளிநாட்டு வேலைக்கான உடல்தகுதியாக, மஞ்சள் காய்ச்சல் (Yellow fever) சோதனை முன்வைக்கப்பட்டது. கொரோனாவிற்கு பின், முழு உடல் பரிசோதனையும், வைரஸ் தாக்குதல் சோதனைகளும் கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி விசா, தங்குமிடம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் எந்தவித பாதிப்பும் இருக்காது.
எந்தெந்த நாடுகளில் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கும்?
நாடுகளின் வளத்தை பொறுத்து, வேலைவாய்ப்புகள் மாறுபடும். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மென்பொறியாளர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர் போன்ற வேலைவாய்ப்புகள் இந்தியர்களுக்கு பிரகாசமாக இருக்கும். எத்தியோப்பியா நாட்டில் கடந்த 65 வருடங்களாக இந்திய பேராசிரியர்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எத்தியோப்பியாவின் பெரும்பாலான கல்லூரிகளில் இந்திய பேராசிரியர்களே பணியாற்றுகிறார்கள்.
நைஜீரியாவில் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிகம் என்பதால், அதுசார்ந்த வேலைகளுக்கு இந்தியர்கள் பயன்படுத்தப்படுவர். கென்யாவில் காகித உற்பத்தி, காகித அச்சு போன்ற வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமானம் தொடர்பான வேலைவாய்ப்புகளும், தூய்மை பணிகள் சம்பந்தமான வேலைகளும் அதிகமாக இருக்கும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் முடிவெட்டுவதில் தொடங்கி, தூய்மை பணி கள் வரை எல்லாமே இந்தியர்களின் கைவண்ணமாகவே இருக்கும்.
கொரோனாவினால் வெளிநாடுகளில் புதிய வேலைவாய்ப்புகள் பெருகுமா?
நிச்சயமாக. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், கிருமி நாசினி இயந்திரங்களை இயக்குபவர்கள் என வேலைவாய்ப்புகளை கொரோனா உருவாக்கி உள்ளது. இதுபோன்ற பணிகளுக்கு உலகளவில் தேவை இருக்கும். இதனால் கூடுதலான இந்தியர்கள், வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பர்.
எப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கும்?
2021-ம் ஆண்டின் பிற்பகுதியில், நிறைய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. கொரோனா அச்சத்தினால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களும், அவர்களோடு புதிய நபர்களும் வெளிநாடு செல்ல அதீத வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் உலக நாடுகள் பாதி வேலையாட்களை கொண்டே இயங்கி வருகிறது. நிலைமை சீரடையும் பட்சத்தில் 50 சதவீத பணியாளர்கள் 100 சதவீதமாக உயர்த்தப்பட்டு, வேலைக்கு அழைக்கப்படுவர். அதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பெருகும்.
தொழிற்பயிற்சிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்குமா?
தொழிற்பயிற்சிகளுக்கு என்றுமே வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். குறிப்பாக உற்பத்தி துறை சம்பந்தமான தொழில்பயிற்சிகளுக்கு அதீத வரவேற்பு உண்டு.