
யாழ் குடாநாட்டை புரட்டிய புயல்! இதுவரை பாதிப்புற்றோர் விபரம்
யாழ் குடாநாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23 ஆயிரத்து 304 குடும்பங்களைச் சேர்ந்த 75570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர்,
புரவிப் புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதுவரை 23304 குடும்பங்களைச் சேர்ந்த 75570 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருவர் உயிரிழந்துள்ளதோடு ஆறு பேர் காயம் அடைந்துள்ளார்கள்.
94 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன், 3024 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சிறு மற்றும் மத்திய முயற்சியாளர்கள் 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 27 வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன.
தற்போது இருபத்தொரு இடைத்தங்கல் முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
யாழ். மாவட்டத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு நிஷா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர், தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் யாழ் மாவட்டத்தில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.