
புரவி புயலின் கோர தாண்டவத்தால் கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு!
நெடுந்தீவு பிரதேசம் அசாதாரண சூழ்நிலையால் கடுமையான அழிவை சந்தித்துள்ளது என நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அப்பிரதேசத்திற்கான படகுப் பயணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடபகுதியில் தொடரும் மழை காலநிலையால் மீனவ படகுகள் பல சேதமடைந்ததோடு, கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளன.
படகுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கும் பாதுகாப்பு அணை வாண் இல்லாமை, இம் மீனவர்களது வாழ்வாதார முதலீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின் படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை,களஞ்கட்டி என்பன அழிவடைந்ததால் மீனவர்கள் பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.
நெடுந்தீவு J/ 1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும் நெடுந்தீவு பிரதேச செயலர் F.C.சத்தியசோதி தெரிவித்தார்.