யாழ். மாவட்டத்தில் 57 ஆயிரத்து 513 பேர் மழை வெள்ளத்தால் பாதிப்பு!
புரெவிப் புயல், மழை வெள்ளத்தால் யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
கடும் மழை – வெள்ளத்தால் பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை விட கூரை விரிப்புக்கள், நில விரிப்புக்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருள்களை வழங்க பிரதேச செயலாளர்களால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சிறு தொழில் முயற்சியில் ஈடுபட்டு வந்த 574 தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன் தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம், சுகாதாரத்துறையினர் ஆகியோரும் இவர்களுக்கான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளரால் சுமார் 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.