வடமாகாணத்துக்கு கல்வித்துறை கொள்கையை தயாரிப்பது தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடமாகாணத்துக்கு கல்வித்துறை கொள்கையை தயாரிப்பது தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

 

இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வித் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கலை கலாசாரத் துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை சார்ந்த பிரச்சினைகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கொள்கைகளை துறைசார் உத்தியோகத்தர்கள் ஆளுநரிடம் தெளிவுபடுத்தினார்கள்.

இதன்போது ஆளுநர் கருத்து வெளியிடுகையில்,

கல்வித்துறையிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, பால்நிலை சமத்துவம், வர்க்க வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்காது ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி ஆகியவற்றில் பாடவிதான, புறநிலை மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு அறிவூட்டுவதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கலாம்.

மேலும் பாடசாலைகளை சமூக மட்டத்தில் கட்டியெழுப்புவதற்கு பெற்றோர், பாடசாலைகளின் அருகில் உள்ள சமூகத்தில் வசிப்பவர்கள், மத குருமார்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இணைந்து குழு ஒன்றை அமைத்து அதனூடாக சில விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு பரீட்சைகளின் மூலம் மாணவர்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமை என்பவற்றை அளவிட முடியாது. ஆகவே அவர்களுடைய அடைவு மட்ட குறைபாடுகளுக்கான சரியான காரணங்களில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் கற்கை நெறி ஒன்றை பூர்த்திசெய்து வெளியேறும் பொழுது சமூகத்தில் ஒரு நற்பிரஜையாக வாழ்வதற்கான தன்மையைப் பெற்றிடுதல் வேண்டும்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 7௦ புள்ளிகளை விட குறைவாக பெற்ற மாணவர்களில் விசேட கவனம் செலுத்துவதோடு, தரம் 9 மாகாணப் பொது பரீட்சையில் 4௦ புள்ளிகளை விட குறைவாகப் பெறும் மாணவர்களுக்கும் விசேட கவனம் செலுத்தி அவர்களுடைய அடைவு மட்டங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

மாணவர்களை முக்கியமான அலுவலகங்களுக்கு குறிப்பாக வங்கி, கச்சேரி, தபால் நிலையம், புகையிரத நிலையம் போன்றவற்றுக்கு அழைத்துச்சென்று அதன் செயற்பாடுகள் பற்றி அறிவூட்டுவது அவசியமாகும்.

ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதோடு அவர்கள் கற்பிக்கும் பாடம் மாணவர்களுக்கு ஏன் அவசியம் மற்றும் எவ்வாறு சமூக மட்டத்தில் உதவும் என்பதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு புரிய வைப்பது அவசியமாகும்.

சமூகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுடைய பங்கு முக்கியமானது என்பதோடு , தகைமை உள்ள ஆசிரியர்களை மட்டுமே முன்பள்ளி ஆசிரியர்களாக அனுமதிக்க வேண்டும். ஆரம்ப நிலைக் கல்வி  பயிலாமல் பாடசாலைகளில் உள்வாங்கப்படும் மாணவர்களின் செயற்திறன் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரிக்க வேண்டியுள்ளது.

மாணவர்களுடைய கற்றல் நடவடிக்கைகளுக்கு இணையாக அவர்களுடைய விளையாட்டுத் துறை சார்பான ஈடுபாடும் அமைய வேண்டும். கிராம மட்டங்களிலான இளைஞர் குழுக்களை உருவாக்கி அவர்களை விளையாட்டுக் கழகங்களாக உருமாற்றி விளையாடுவதற்கான வழிமுறைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

பாடசாலைகளை குழுக்களாக்கி அவர்களுக்கு இடையே நட்புரீதியான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதோடு பாரம்பரிய விளையாட்டுக்களை அடையாளப்படுத்தி கிராம ரீதியாக அதனை முன்னெடுத்து அவை அழியவிடாது பாதுகாக்க வேண்டும்.

பாடசாலை மட்டத்திலேயே மாணவர்களின் கலைசார் திறைமைகளை அடையாளப்படுத்தி அவர்களுக்கான குழுக்களை அமைத்து திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கிராம மட்டங்களில் கலை கலாசார நிகழ்ச்சிகளை எளிமையாக அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்படுத்துவதோடு அவை தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இறுதியாக வடமாகாண இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை கல்வி, விளையாட்டு மற்றும் கலை கலாசாரம் போன்றவற்றின் மூலம் இல்லாது செய்யலாம். தன்னார் வள இளைஞர் குழுக்களை உருவாக்கி பயனுள்ள சில முகாம்களை அவர்களூடாக நடாத்தி சமூகத்திற்கு நல்ல பல செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றார்.