அரசியல் கைதிகள் விவகாரம்: நீதி அமைச்சரைச் சந்திக்கின்றார் அங்கஜன்
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விசேட பொறிமுறையை உருவாக்குதல் குறித்து நீதியமைச்சருடன் நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை்கப தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து 2021ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள கிராமிய உற்பத்திகளை கட்டியெழுப்பினால் நடுத்தர மக்கள் பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைவார்கள்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நெடுகாலமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள உறவுகளின் உணர்வுகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு புரிந்துள்ளோம். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கம் அரசியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையான முறையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.
அரசியல் கைதிகள் என்ற நிலைக்குள் பல தரப்பினர் உள்ளடங்குகிறார்கள். இவர்களின் விடுதலை குறித்து விசேட பொறிமுறை வகுக்கப்பட்ட வேண்டும். இவ்விடயம் குறித்து ஆளும் தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை நீதியமைச்சரை சந்திக்கவுள்ளோம்.
ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவது ஜனாதிபதியின் பிரதான இலக்கு. நீதித்துறையின் கட்டமைப்புக்குள் அரசியல் தலையீடு தாக்கம் செலுத்த தற்போது வாய்ப்பில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.