மஹர சிறைச்சாலைக்கு சென்றுள்ள விசேட காவல் துறை குழு..!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட காவல்துறை குழுவொன்று அந்த சிறைச்சாலைக்கு செல்லவுள்ளது.
முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவான கண்காணிப்பு மற்றும் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காகவே அந்த குழு அங்கு செல்லவுள்ளது.
நேற்றும், நேற்று முன்தினமும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
குறித்த சம்பவத்தின் போது சிறைச்சாலை களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மாத்திரை வகை தொடர்பில் விசேட மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த மாத்திரைகளை உட்கொண்டே சிறைக்கைதிகள் அமைதியின்மையில் ஈடுபட்டதாக வெளியாகும் கருத்துக்கள் தொடர்பிலான உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை விசேட அதிரப்படையின் 150 இற்கும் அதிகமான அதிகாரிகள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
அவர்களில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவும் அடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறைச்சாலையின் அனைத்து கைதிகளையும் கொவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்த அவதனாம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த அமைதியின்மை சம்பவத்தால் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 108 பேர் காயமடைந்ததுடன் 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.