இது சட்டம் அல்ல ஒழுக்கம்

இது சட்டம் அல்ல ஒழுக்கம்

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்காக சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு ​நேற்று (03) இடம்பெற்றது.

சுற்றூடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து மீள்சுழற்சி கொள்கலன் பிரதமரிடம் வழங்கப்பட்டது.

´இது சட்டம் அல்ல ஒழுக்கம்´ என்ற எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் இந்த சுற்றாடல் பாதுகாப்பு சார்ந்த திட்டத்தை நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் மற்றும் நிறுவன மட்டத்தில் செயற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பாடசாலை அமைப்பின் ஊடாக மாத்திரம் நாளொன்றுக்கு ஒதுக்கப்படும் கார்பன் பேனாக் குழாய்களின் எண்ணிக்கை சுமார் 80 கிலோகிராம் ஆகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் எண்ணக்கருவிற்கு அமைய, இதுவதை கவனம் செலுத்தப்படாத இந்த சுற்றாடல் பிரச்சினைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பான மீள்சுழற்சி அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு, சுற்றாடல்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டது.

பாவனையின் பின்னர் ஒதுக்கப்படும் 3000 கார்பன் பேனா குழாய்கள் மற்றும் 500 பற்தூரிகைகளை இந்த ஒரு கொள்கலனில் இட முடியும்.

இந்த கொள்கலன் அனைத்து பாடசாலைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுவதுடன், INSEE நிறுவனம் மற்றும் அட்லஸ் நிறுவனத்தினால் அவை கொள்வனவு செய்யப்படவுள்ளன.