இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பொலிஸார்
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகளுக்கு
இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரை அழைத்துச்செல்ல முயன்றபோது அதனைத் தடுத்து பொதுச் சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பண்டாரகமை, அட்டுலுகம பகுதியில் அண்மையில் பதிவாகியதையடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை பொதுமக்களின் நலனுக்காக தங்கள் கடமைகளில் ஈடுபட்டுவரும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.