உள்நாட்டு விமான சேவை 80 சதவீதமாக அதிகரிப்பு - ஹர்தீப் சிங் பூரி

இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இந்தியாவில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

 

கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. முதலில் 33 சதவீத விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி அளித்தது. தொடர்ந்து, விமானங்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. 

 

 

இந்நிலையில், உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக, விமான போக்குவரத்துத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 

கடந்த மே 25-ம் தேதி உள்நாட்டு விமானங்களில் பயணிக்க 30 ஆயிரம் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த எண்ணிக்கை, பின் 2.52 லட்சமாக உயர்த்தப்பட்டது.

 

இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.