சுகாதார அமைச்சர் பவித்திராவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை : இலங்கை வைத்திய சபை!

சுகாதார அமைச்சர் பவித்திராவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை : இலங்கை வைத்திய சபை!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை வைத்திய சபையின் தலைவர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஐந்து பேரையும், தமது பதவிகளில் இருந்து நீக்குவதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வைத்திய சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே, தான் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தான் வைத்திய சபையின் தலைவர் பதவியிருந்து விலகுவதற்கு தயார் என அதன் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா தெரிவித்துள்ள போதிலும், ஏனைய உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலக முடியாது என அறிவித்துள்ளனர்.

மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், வைத்திய சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரம் சுகாதார அமைச்சருக்கு உள்ள போதிலும், உறுப்பினர்களை விலக்குவதற்கான அதிகாரம் அமைச்சருக்கு இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையிலேயே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.