
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
மேலும் 350 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கொவிட் நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்ற இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இதுவரையில் இலங்கையில் மொத்தமாக தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட்19 நோயில் இருந்து மேலும் 728 பேர் குணமடைந்தனர்.
தொற்றுநொயியல் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர்களில் 19 ஆயிரத்து 32 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, அம்பமுகவ பொது சுகாதார வைத்திய அதிகாரிப் பிரதேசத்துக்கு உரிய, கினிகத்தேனை கெலில்வத்தை - ப்ளக்வோட்டர் தோட்டப் பிரிவிற்கும், வெலிஓய தோட்டத்தின் தண்டுகல தோட்டப் பிரிவிற்கும் நடமாட்டத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அம்பமுக பொது சுகாதார வைத்திய அதிகாரி பி.காமதேவன் தெரிவித்தார்.
இந்த பகுதிகளில் 20 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சிறைச்சாலைகளை மையப்படுத்திய கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 306ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 113 பேர் சிறைக்கைதிகளை மையப்படுத்தி கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதற்கிடையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள களனி - வனவாசல, பகினிகஹபில்லேவ பகுதியைச் சேர்ந்த சிலர் , அதிவேக நெடுஞ்சாலையில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
தங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கக்கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில், எஹெலியகொட - தியுரும்பிட்டியவில் உள்ள தொழிற்சாலையில் இன்றையதினம் மேலும் 35 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.
இதன்படி அங்கு மொத்தமாக 84 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, மருதானை தொடருந்து நிலையத்தின் பணியாளர் ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து, அந்த நிலையத்தின் பணியாளர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.