இன்றிரவு 10 மணிக்குள் இலங்கையை ஊடறுக்கவுள்ள “புரெவி” சூறாவளி

இன்றிரவு 10 மணிக்குள் இலங்கையை ஊடறுக்கவுள்ள “புரெவி” சூறாவளி

‘புரெவி’ சூறாவளி அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண ஆளுநர்கள், அந்ததந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சூறாவளியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான நிவாரணங்களை வழங்வதற்கான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று இரவு 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் புரெவி சூறாவளி, திருகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தரைதொட்டு, முல்லைத்தீவு ஊடாக மன்னார் வரையில் செல்லும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு கடற்பரப்பில் இருந்து தீவுக்குள் பிரவேசிக்கின்ற புரெவி சூறாவளியின் காரணமாக, மின்சார விநியோகத்துக்கு தடங்கல்கள் ஏற்படுமாக இருந்தால், அதனை சீர்செய்வதற்காக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு மேலதிக மின்சார ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கடும் காற்றின் காரணமாக மின்சார கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற அனர்த்தத்துக்குரிய நிலைமைகள் ஏற்படுமாக இருந்தால், மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சூறாவளியின் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளும் வகையில், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தசூறாவளிக்கு முகம் கொடுப்பதற்கு கடற்படையினரும் விசேட வேலைத்திட்டங்களை வகுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நங்கூரமிட்டிருந்த கடற்படையின் இரண்டு கப்பல்கள், பாதுகாப்பு கருதி ஹம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்த சூறாவளியின் விளைவாக, நாட்டின் பல்வேறு இடங்களிலும் காற்றுறுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பெய்யக் கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதி பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சகல மக்களுக்கும் இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக தங்குமிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கிய தகலுக்கமைய முன்னேற்ற கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டென்லி டி மெல் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் குறிப்பிட்டார்.