கொரோனா வைரஸ்: பிரேசிலில் 10 லட்சத்தை தாண்டியது நோய்த்தொற்று பாதிப்புகள்

கொரோனா வைரஸ்: பிரேசிலில் 10 லட்சத்தை தாண்டியது நோய்த்தொற்று பாதிப்புகள்

பிரேசிலில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்த எண்ணிக்கையை கடக்கும் இரண்டாவது நாடு பிரேசில்.

 

பிரேசிலில் குறைந்த அளவில் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக  இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

தற்போதைய நிலவரத்தின்படி, பிரேசிலில் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,32,913ஆக உள்ள நிலையில், அந்த நாட்டில்  நோய்த்தொற்று பாதிப்பு உச்ச நிலையை அடைவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆக கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பிரேசிலில் இந்த நோய்த்தொற்று பாதிப்பால் ஏழை மற்றும் பூர்வகுடி மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

பிரேசிலில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் இவ்வளவு தீவிரமாக சென்றுகொண்டிருக்க, அந்த நாட்டின் அதிபரான தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட ஜெயிர்  போல்சனாரோவோ இந்த விவகாரத்தில் தன் மீது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவிசாய்க்கவில்லை. மேலும், சமூக விலகல் அறிவுரைகளை கடைபிடிக்காத அவர் அது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்று வாதிடுகிறார்.

 

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்த மாகாண ஆளுநர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், "நமது வாழ்க்கை தொடர்ந்து நடக்க வேண்டும். வேலைகளை  பாதுகாக்க வேண்டும். நாம் கண்டிப்பாக இயல்புநிலைக்குச் சென்றே தீர வேண்டும்" என்று கூறினார்.

 

பிரேசில் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தான் உள்பட பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறி வருகிறார்.

 

இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் இதுவரை 22,19,675 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.