அனைத்து வழிகளிலும் தயார் - மக்களுக்கும் அறிவுறுத்தல்

அனைத்து வழிகளிலும் தயார் - மக்களுக்கும் அறிவுறுத்தல்

புரவி புயலானது வடக்கு கிழக்கை அதிகளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக ரீதியாக கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அதற்கான தயார்படுத்தலில் ஈடுபடுமாறு பிரதேச செயலாளர்கள் பணித்துள்ளனர்.

இந்நிலையில் வவுனியா பிரதேச செயலாளர் ந. கமலதாசன் கருத்து தெரிவிக்கையில்,

கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக கிராம மட்டத்தில் அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்களுக்கான அறிவித்தல்கள் அந்தந்த பகுதி வணக்கஸ்தலங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதுடன் பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்களில் தேவையேற்படும் பட்சத்தில் மக்களை தங்க வைப்பதற்கும் அவர்களுக்கான உணவு வசதிகளை ஏற்படுத்தவும் தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை மின்சார சபையினரால் மரங்கள் விழும் பட்சத்தில் அவற்றனை உடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.