மஹர சிறைச்சாலை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள்
மஹர சிறை கைதிகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பொலிஸாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன். சிறைச்சாலையின் நிர்வாகத்தை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழு கூடிய போது பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து வெற்றிகரமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட நிலையில், நேற்று (01) பிற்பகல் சிறைச்சாலையின் நிர்வாகத்தை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளித்ததாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.
இதன்போது, மேலும் 106 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்த நிலையில் அவர்களில் 81 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இவ்வாறு காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.