மஹர சிறைச்சாலை சம்பவத்தில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடம்...!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதட்டநிலை காரணமாக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் கைதி ஒருவர் மரணித்தார்.
குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா இதனை தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதட்டநிலை காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த 107 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன
அத்துடன். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது அங்குள்ள பல சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான அறிக்கை இன்று கிடைக்கப்பெறும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், சம்பவத்தின் போது கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அதிகமானோர் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் சிறைச்சாலை வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினர் உட்பட 400 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.