நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நேற்றைய தினம் 503 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 7 பேரை தவிர ஏனைய அனைவரும் கொவிட் 19 நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி திவுலுப்பிட்டிய மற்றும் பேலியகொடை இரட்டைக் கொவிட் கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 20,442 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,987 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 558 பேர் நேற்று குணமடைந்தனர்.
இதன்படி இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களில் 17,560 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் 6,309 பேர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்தார்
வடமாகாணத்தில் தற்போதைய நிலையில் நவம்பர் மாதத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 பேரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேரும் முல்லைத்தீவில் இருந்து 2 பேருமாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.
நவம்பர் மாதத்தில் வடக்கு மாகாணத்தில் 7682 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உரிய பிசிஆர் பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கிடைக்கின்ற முடிவுகளின் பிரகாரம் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.
அதேநேரம் தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தினை முடக்க வேண்டிய தேவையில்லை.
எனினும் காரைநகர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில்உள்ளவர்களின் பிசிஆர் முடிவுகளின்படி சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்பட கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கி வந்த மருதங்கேணி கோரனா சிகிச்சை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
அங்கிருந்த 30 நோயாளர்களை நேற்று கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கொரோனாசிகிச்சை நிலையத்துக்கு மாற்றியுள்ளோம் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஷ்வரன் தெரிவித்தார்.