மஹர சிறைச்சாலை சம்பவம்- ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் ஆலோசனை

மஹர சிறைச்சாலை சம்பவம்- ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் ஆலோசனை

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதட்டநிலை தொடர்பில் ஆராய்தற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கையை ஒருவாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையை நீதியமைச்சர் அலி சப்ரி வழங்கியுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன, தலைமையில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் இந்த குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நீதியமைச்சின் பிரதான சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா, நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹண ஹப்புகஸ்வத்த, பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி ஜயசிங்க ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த காரணம், அது தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவர்கள், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றும் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்து கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பில் இந்த குழுவினால் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

மஹர சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியான 187 கைதிகள் கொழும்பு சிறைச்சாலையின் விசேட பிரிவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் பலியாகினர்.சம்பவத்தில் 63 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளதுடன் 15 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக றாகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.