கொழும்பில் மேலும் மூன்று காவற்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கொழும்பில் மேலும் மூன்று காவற்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் மூன்று காவற்துறை அதிகார பிரதேசங்களும் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு காவற்துறை அதிகார பிரதேசங்களும் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, புறக்கோட்டை, கொழும்பு கரையோரம் ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்பாஸ், ஆட்டுப்பட்டித் தெரு, டேம் வீதி, வாழைத் தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை மற்றும் மருதானை ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்களும் கொம்பனித் தெரு காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட, வேகந்த கிராம சேவகர் பிரவும் பொரளை காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட வனாத்த முல்ல கிராம சேவகர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன தொடர்குடியிருப்பு மற்றும் சாலமுல்ல, விஜயபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, மட்டக்குளி காவல்துறை அதிகார பிரதேசத்துக்குட்பட்ட ரன்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் ஃபேர்சன் வீதியின் தெற்கு பிரதேசம் என்பனவும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, புறக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பழைய மெனிங் சந்தையிலும் 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு வீதிகளிலும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் ராகமை, நீர்கொழும்பு என்பனவும் இன்று காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

எனி;னும் கம்பஹா மாவட்டத்தின், வத்தளை, பேலியகொடை மற்றும் களனி ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நாட்டின் ஏனைய மாவட்டங்களி;ல் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.