புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்து - பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அதிகளவு ஆபத்து நிலவும் பகுதிகளில் இருந்து குறைந்தளவு ஆபத்து காணப்படும் பகுதிகளிற்கு மக்கள் செல்வதை கட்டுப்படுத்தாவிட்டால் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுசுகாதார பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு வெளியே பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களில் குறைவடைந்துள்ள போதிலும் அதிகளவு ஆபத்து நிலவும் பகுதிகளில் இருந்து குறைந்தளவு ஆபத்து காணப்படும் பகுதிகளிற்கு மக்கள் செல்வதை கட்டுப்படுத்தாவிட்டால் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் ஆபத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் உள்ளவர்கள் கொழும்பிலேயே இருக்கவேண்டும், ஏனையவர்கள் அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் கொழும்பிற்கு செல்லவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த தருணத்தில் கூட ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது என எங்களால் தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் அனைவரும எங்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயல்கின்றோம்.
அதேவேளை மக்கள் தங்கள் நடமாட்டத்தை குறைத்து புதிய கொத்தணிகள் உருவாவதை தடுப்பதன் மூலம் எங்களிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.