கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் - ஜோ பைடன் நம்பிக்கை

கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” என அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியின் வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 


ஆனால் டிரம்ப் ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்தது என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அதே சமயம் ஜோ பைடன் தான் ஆட்சி அமைப்பதற்கான பணிகளை இப்போதே தொடங்கி விட்டார். தனது தலைமையில் அமையும் புதிய மந்திரி சபையும் அவர் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் “தேங்க்ஸ் கிவ்விங் டே” எனப்படும் அறுவடை திருநாளையொட்டி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உங்கள் ஜனாதிபதியிடம் இருந்து உண்மையை கேட்க நீங்கள் எப்போதும் தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வைரசின் வளர்ச்சியை நாம் குறைக்க வேண்டும். டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முன்னணி களப்பணியாளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் சக குடிமக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

கொரோனா நமக்கு வலியையும், இழப்பையும், விரக்தியையும் கொண்டுவந்தது மற்றும் பல உயிர்களை பறித்தது. அது நம்மை பிளவு படுத்தியது. கோபப்படுத்தியது. ஒருவருக்கொருவர் எதிராக அமைந்தது. ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் வைரசுடன் போராடுகிறோம். ஒருவருக்கு ஒருவர் அல்ல.

நாம் நமது முதுகெலும்புகளை இரும்பு போல ஆக்க வேண்டும். நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். கொரோனாவுடன் போராட நம்மை நாமே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் வரும் இந்த அறுவடை திருநாள் கொண்டாட்டத்தை மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். வழக்கம்போல் பெரிய அளவில் கூட்டங்களை கூட்டாமல் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் இதனை கொண்டாட வேண்டும். இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும் என்பதை நான் அறிவேன். விரைவில் நமது வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்ப போகிறது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நம்மை பிளவு படுத்தும் இந்த கடுமையான காலத்துக்கு ஒரு முடிவு வரும். அது நமது வாழ்வில் ஒளி மற்றும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்