கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,967 ஆக அதிகரிப்பு
நாட்டில் நேற்றைய தினம் 459 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
பேலியகொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 458 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் மாத்திரம் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 436 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 967 ஆக காணப்படுகின்றது.
அதேநேரம் கொவிட் 19 தொற்றில் இருந்து நேற்றைய தினம் 465 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் 5 ஆயிரத்து 911 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 4 பேருக்கு தொற்றுறுதியானதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பரிசோதiனை மேற்கொள்ளப்பட்ட 215 பீ.சி.ஆர் மாதிரிகளில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைப்பட்டிருந்த 4 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அழகையா லதாகரன் எச்சரித்துள்ளார்.
முகக்கவசம் அணியாத 15 பேருக்கு எதிராக நேற்றைய தினம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு பிரவேசிப்போர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாவட்ட அரசாங்க அதிபர் ருபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்களுடனான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டம் தற்போது கொரோனா தொற்று நோய் முழுமையாக இல்லாத ஒரு மாவட்டமாக உள்ளதுடன் அந்த நிலைமைய தொடர்ந்தும் பேணுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான தற்போதைய நிலமை தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலக அளவில் கொரோனா நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு கோடியை கடந்துள்ளது.
இதன்படி தற்போது வரையில் மொத்தமாக 6 கோடியே 79 ஆயிரத்து 161 போ கொவிட் நோயினால்பீடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரத்து 117 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் 14 லட்சத்து 13 ஆயிரத்து 729 மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.