இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பிலான தகவல்கள்
நாட்டில் மேலும் 287 பேருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.
அவர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் தற்போது ஐந்தாயிரத்து 743 பேர் கொவிட் 19 நோய்தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து இன்றைய தினம் மேலும் 465 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதற்கமைய 14 ஆயிரத்து 962 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பேருவளை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
தார்கா நகரை சேர்ந்த அவர் உள்ளிட்ட 83 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தர்கா நகரை சேர்ந்த 2 பேருக்கு அண்மையில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த நிலையில் இந்த பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அந்த பரிசோதனைகளில் 38 பேரின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில் அதில் குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தினுள் சுமார் 12 ஆயிரத்து 248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட தோட்டப்பகுதிகளில் இன்று தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி பிரவுன்ஸ்வீக், பெனியன், காட்மோர், ஸ்டொக்கம் ஆகிய தோட்ட பகுதிகளில் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
குறித்த தோட்டப்பகுதிகளில் சுமார் 500 பேர்வரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.