5000 ரூபாய் கொடுப்பனவு மக்களுக்கு போதுமானதல்ல..!
2021 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டின் குழுநிலை விவாதத்தின் இரண்டாம்நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது.
புத்த சாசனம், மதவிவகாரம், அரச நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் முதலான அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து இன்று விவாதம் இடம்பெறுகின்றது
நாடாளுமன்ற அமர்வு ஆரம்பித்த நிலையில், அறிவிப்பு ஒன்றை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் துன்ப நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும், அவர்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ஒரு மாதத்திற்காக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாவை ஒரு வாரத்தில் செலவு செய்ததாக மக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும், 5 ஆயிரம் ரூபா ஒருபோதும் போதுமதானதல்ல என்றும், குடும்பம் ஒன்றுக்கு ஆகக்குறைந்தது 20 ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பது முன்னதாக தமது யோசனையாக இருந்தது என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பத்தினருக்கு மாதாந்தம் வாழ்க்கைச் செலவாக ஆகக் குறைந்தது 15 ஆயிரம் ரூபா அவசியமாகும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரிக்கப்படுவதால், வாழ்வாதாரத்தை இழக்காத மக்களின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளதுடன், ஏனைய மாவட்டங்களின் நிலைமை இதனை விடவும் சிறந்ததல்ல என்பது தாங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, எதிர்வரும் வெள்ளிக்கிழமை இதற்கு முழுமையான பதிலை வழங்குவதாக தெரிவித்தார்.
நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் கொரோனா நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி மக்களை குழப்பமடையச் செய்யாதிருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கோருவதாக செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தாங்கள் மக்களை குழப்பவில்லை என்றும், அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாகவே மக்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.