தாழமுக்க பிரதேசமானது புயல் சின்னமாக மாற்றமடைய கூடும் ..!

தாழமுக்க பிரதேசமானது புயல் சின்னமாக மாற்றமடைய கூடும் ..!

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல்சார் மற்றும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் உடனடியாக நிலப்பகுதி அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் புத்தளம் முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் கடல்சார் மற்றும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் போது அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஆலோசைன வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிழக்காக நிலவும் தாழமுக்க பிரதேசமானது அடுத்து வரும் 6 மணித்தியாலங்களில் குறைந்தழுத்த தாழமுக்கமாக மாற்றமடையக் கூடும் எனவும் அது எதிர்வரும் 30 மணித்தியாலங்களில் புயல் சின்னமாக மாற்றமடைய கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடுவதுடன் அந்த மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் குறித்த நிலைமையானது வடகடற்பிராத்தியத்தின் வாயிலாக இந்தியாவின் தமிழ்நாட்டு கரையோரப்பகுதி நோக்கி நகரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.